தமிழ்நாடு

இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Published On 2022-09-04 05:08 GMT   |   Update On 2022-09-04 05:08 GMT
  • இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

சென்னை:

கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் போட்டுக்கொண்டவர்கள் அவசியம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும். இந்த மாத இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி அரசின் சார்பில் இலவசமாக போடப்படுகிறது.

இதை தீவிரப்படுத்துவதற்காக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.

பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்களில் சுமார் 15 சதவீதம் பேர்தான் போட்டுள்ளார்கள். பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன். இந்த மாதம் மட்டும் தான் இலவசமாக போடப்படும்.

பொதுமக்கள் வசதிக்காக இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் அதாவது 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்த முகாம்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வழக்கம் போல் தினமும் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News