தமிழ்நாடு செய்திகள்

சித்திரை திருவிழாவை மிஞ்சிய அ.தி.மு.க. மாநாட்டு கூட்டம்

Published On 2023-08-20 09:17 IST   |   Update On 2023-08-20 09:32:00 IST
  • திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
  • மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

மதுரை:

கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

அதனை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வராற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

நேற்று காலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரெயில்கள், பஸ், வேன், கார் மூலமாகவும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மாநாட்டு திடலை நோக்கி படையெடுத்து வந்தனர்.

அவ்வாறு பகலிலேயே வந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுத்தனர். பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அறை எடுக்காதவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கி இரவை கழித்து இன்று காலை மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். காலையிலேயே அவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Tags:    

Similar News