மதுரை அருகே முதியவரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த 'மர்ம' நபர்கள்
- போலீசார் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையாவை தேடி வந்தனர்.
- முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுரை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். வழக்கம்போல் இன்று காலை வீட்டில் இருந்து டீக்கடைக்கு புறப்பட்டு சென்றார். டீ தயாரிப்பதற்கான பணியில் மும்முரமாக இருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோ ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் கருப்பையாவை, குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவுக்குள் போட்டனர். பின்னர் அந்த ஆட்டோ அங்கிருந்து சென்று மறைந்தது. இதைப் பார்த்த அங்கு டீ குடிக்க வந்தவர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து செக்கானூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையாவை தேடி வந்தனர். இதற்கிடையே செக்கானூரணி அருகேயுள்ள பன்னியான் கண்மாய் பகுதியில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது இன்று காலை மர்ம நபர்களால் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையா என்பது தெரியவந்தது. அவர் கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். மேலும் அவருக்கு அருகிலேயே கட்டை ஒன்றும் ரத்தக்கரை படிந்தவாறு கிடந்தது.
கொலையுண்ட கருப்பையாவின் உடலை கைப்பற்றிய போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, இன்ஸ்பெக்டர் திலகராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாகவும், நிலத் தகராறு தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் செக்கானூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் ஆட்டோவில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.