தமிழ்நாடு

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது போல நடித்து கணவனை தீர்த்து கட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-11-18 08:44 GMT   |   Update On 2022-11-18 08:44 GMT
  • திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
  • கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.

கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.

இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.

திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News