தி.மு.க. மகளிர் மாநாட்டுக்கு வரும் சோனியாவை வரவேற்க திரண்டு வாருங்கள்: கே.எஸ்.அழகிரி
- பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிற மசோதா தலைவர் ராகுல் காந்தி கூறிய படி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்.
- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களை தாங்கிக் கொண்டு எழுச்சிமிக்க வரவேற்பை நன்றி பெருக்கோடு அளித்திடுமாறு காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையில் நாளை நடக்கிறது.
19 ஆண்டுகாலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி சாதனைகளை புரிந்தவர். 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியை அகற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு மதச் சார்பற்ற கூட்டணி அமைத்து 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்தவர். மீண்டும் 2009 தேர்தலில் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் 2019 மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை குறைவாக இருந்தாலும் பெண்களுக்கு மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்தத்தை பிரதமர் மன்மோகன்சிங் மூலம் முன்மொழிய காரணமாக இருந்தவர்.
குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்று மகளிர் மசோதா நிறைவேற ஆட்சியை பணயம் வைத்து துணிச்சலான முடிவு எடுத்தவர். அன்று நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பா.ஜ.க., அதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிற மசோதா தலைவர் ராகுல் காந்தி கூறிய படி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இதுதான் பா.ஜ.க. மகளிரை ஏமாற்றுகிற அரசியலுக்கு உரிய சான்றாகும்.
சோனியா காந்தியை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கலைஞரோடும், இன்றைய தலைவர் மு.க. ஸ்டாலினோடும் சரியான புரிதல் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் மகத்தான ஆட்சி மாற்றங்கள் அமைய பெரும் துணைபுரிந்தது. அத்தகைய சூழலில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கலை ஞரால் தியாகத் திருவிளக்கே என்று அழைக்கப்பட்ட சோனியா காந்தியும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து முறியடித்து, மோடியின் ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல்காந்தியோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுகிற வீராங்கனை பிரியங்கா காந்தியும் இன்று இரவு 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகை புரிகிறார்கள். அதற்கு பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு அவர் தங்கியிருக்கிற சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து புறப்பட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகை புரிகிறார்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கும், மகளிர் மாநாட்டிற்கு வருகை புரிகிற அண்ணாசாலையின் இருபுறங்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும் எழுச்சியோடு, பெருந்திரளாக பங்கேற்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களை தாங்கிக் கொண்டு எழுச்சிமிக்க வரவேற்பை நன்றி பெருக்கோடு அளித்திடுமாறு காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.