தமிழ்நாடு செய்திகள்

மேலூர் அருகே கபடி வீரர் வெட்டிக்கொலை

Published On 2023-09-01 11:27 IST   |   Update On 2023-09-01 11:27:00 IST
  • நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரங்கான்பட்டியை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.

இதில் மூத்த மகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் வௌிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

சத்தியமூர்த்தி விளையாட்டு, மஞ்சு விரட்டு, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் பல்வேறு ஊர்களில் நடந்த பந்தயங்களில் அவர் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சத்தியமூர்த்தி வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சத்தியமூர்த்தி அவர்களை பார்த்ததும் பதட்டம் அடைந்தார். பின்னர் அவர் உடனே வீட்டுக்குள் சென்று தப்ப முயன்றார்.

ஆனால் சுதாரித்துக் கொண்டு சுற்றி வளைத்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தியை துரத்தி சென்று பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வீட்டின் வெளியே மகனின் அலறல் சத்தம் கேட்டு கதவை திறந்து வந்த தாய் மல்லிகா, சத்தியமூர்த்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சத்தியமூர்த்தியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News