தமிழ்நாடு செய்திகள்

நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

சத்தியமங்கலத்தில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறையினர் 10 மணி நேரம் சோதனை

Published On 2023-11-18 11:05 IST   |   Update On 2023-11-18 11:05:00 IST
  • சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
  • வரி ஏய்ப்பு அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டவுன் பகுதியில் வாசவி என்ற பெயரில் தங்க, வெள்ளி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரபு காந்த் (45). இவர் நகைக்கடையுடன் நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் கோவையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறையினர் வந்தனர். சத்தியமங்கலம் டவுன் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு திடீரென சென்று ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு, அவரது நண்பர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடையில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கடையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

பின்னர் வருமானவரித்துறையினர் சோதனை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முழுமையான தகவல் தெரிவிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News