தமிழ்நாடு

இண்டிகோ விமானங்களில் கட்டணம் உயர்வு

Published On 2024-01-09 06:20 GMT   |   Update On 2024-01-09 06:20 GMT
  • இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.
  • இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது.

சென்னை:

இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக விமானங்களை இயக்கி வருகிறது.

இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.

மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ விமான கட்டணம் குறிப்பிட்ட கால அளவில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். அதுபோல ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்பி முன் பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது. அந்த விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News