தமிழ்நாடு

மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த கணவர்: போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-11-17 03:59 GMT   |   Update On 2023-11-17 03:59 GMT
  • கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
  • ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம் கூத்தாடிபாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (78), ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி(72). இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் லட்சுமி ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி பலியானார்.

இதை அடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News