தமிழ்நாடு செய்திகள்

பொதுமக்களை பாதுகாக்க 24 மணி நேர கண்காணிப்பு அவசியம்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-11-02 12:20 IST   |   Update On 2022-11-02 12:20:00 IST
  • கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்.
  • குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, தொடர் கனமழையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடவும், இயல்பு நிலை திரும்பும் வரை பாதுகாக்கவும், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத்தெரிகிறது.

கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகனமழையானால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்படுவதோடு, அதிக அளவிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பொதுமக்களைப் பாதுகாக்க, தமிழக அரசும் அது சார்ந்த பல்வேறு துறைகளும் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் சிரமமில்லா, பாதுகாப்பான வாழ்க்கைப் பயணத்திற்கு துணை நிற்க மழைக்காலம் முடியும் வரை 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News