வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதி - உயர்நீதிமன்றத்தில் மனு
- தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும்.
- வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என கூறியுள்ளார்.