தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வத்துக்கு போட்டியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி

Published On 2022-08-11 05:27 GMT   |   Update On 2022-08-11 05:39 GMT
  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
  • தென் மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு செல்லும் போதும் சேலத்தில் இருந்து சென்னை வரும் போதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை தவறாமல் சந்தித்து பேசி வருகிறார். ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றவும் தவறுவதில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். ஆனால் மற்ற வெளி மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்னும் செல்லவில்லை. இதை தொடர்ந்து இந்த சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். சுதந்திர தினத்துக்கு பிறகு அடுத்த வாரம் இந்த சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். தென் மாவட்டங்களில் இருந்து அவர் தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப் பயணத்துக்கு போட்டியாகவே எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News