தமிழ்நாடு

அ.தி.மு.க.வினர் மீது தடியடி-வழக்கு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-03-27 08:25 GMT   |   Update On 2024-03-27 08:25 GMT
  • அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
  • பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமினில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கடந்த 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊட்டி காபி ஹவுஸ்-ல் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் ஊட்டி காவல் துறையினர் வேண்டுமென்றே பல்வேறு தடுப்புகளைப் போட்டு அ.தி.மு.க.வினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தி உள்ளனர்.

ஊர்வலம் செல்ல கால தாமதம் செய்ததை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.

ஆனால், ஊட்டி காவல் துறையினர் அமைதியான முறையில் போராடிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து உள்ளனர். காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகளை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடமும், மாவட்டத் தேர்தல் அலுவலரான, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் நேற்று (26-ந் தேதி) புகாராக தெரிவித்துள்ளனர்.

ஆளும் தி.மு.க.-வின் தாளத்திற்கு ஏற்ப, ஊட்டி டவுன் காவல்துறையினர் கடந்த 25-ந் தேதி அன்றே நீலகிரி மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி டி.வினோத் உள்ளிட்ட பெயர் குறிப்பிடாமல் 20 அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது, பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமினில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

உரிய அனுமதி பெற்றும், 11 மணி முதல் 12.30 மணி வரை அ.தி.மு.க. தொண்டர்களை ஊர்வலம் நடத்த அனுமதிதராமல், ஆளும் தி.மு.க. வினரை திருப்தி படுத்த, அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள ஊட்டி காவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News