தமிழ்நாடு

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசுவதா?- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

Published On 2022-10-30 07:05 GMT   |   Update On 2022-10-30 07:05 GMT
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர்.
  • அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?

சென்னை:

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.க. தலைவர் வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவர்னர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாடவிடுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

இந்த வரிசையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர். அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?

இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என்று பேசி இருக்கிறார் கவர்னர்.

ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்த நாடுகள் 195 என்றால், அதில் 30 நாடுகள் மட்டும்தான் மதச்சார்புள்ள நாடுகளாகச் சொல்கிறது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு நாட்டுத் தலைவர்களாக ஆகமுடியும். 29-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பும், சார்பின்மையும் கொண்ட நாடுகள். மற்றபடி 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள் தான்.

'எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்' என்று கவர்னர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.

அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு எதிராக கவர்னர் பேசுவதையும், கருத்து சொல்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News