தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயம்

Published On 2022-08-30 06:21 GMT   |   Update On 2022-08-30 06:21 GMT
  • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை.
  • கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை.

ஆலந்தூர்:

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன.

மேலும் சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர்.

அதோடு, சென்னை விமானநிலைய டுவிட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமானநிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதை போல் விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முக கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

சில பயணிகள் முகக்கவசம் தொடா்ந்து அணிவதால், சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

முககவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News