தமிழ்நாடு செய்திகள்

எதிர் கட்சிகளை பேசவிடாமல் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது- கே.எஸ்.அழகிரி

Published On 2023-03-26 13:10 IST   |   Update On 2023-03-26 13:10:00 IST
  • கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார்.
  • பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

சிதம்பரம்:

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் இன்று நடந்தது.

போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்தவரே இந்த வழக்கை நிறுத்தியநிலையில், பா.ஜ.க. அரசு நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்து இந்த வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர்.

பொதுவெளியில் ராகுல் காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உட்பட யார் பேசினாலும் அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பதாலும், இதனால் பல உண்மைகள் வெளிவரும் சூழல் உருவாகும் என்தாலும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதி வாங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

1. பிரதமர்மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி எப்படி உடன் செல்கிறார்? அல்லது அதற்கு முன்பே எப்படி செல்கிறார்? 2. பிரதமர்மோடி வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பியபிறகு அதானிக்கு எப்படி முதலீடு வருகிறது. 3. ஒரு நாட்டிற்கு நீங்கள் செல்லும்போது ஒரு தனிமனிதருக்கு மட்டும் தொழில் தொடங்க வாய்ப்பு எப்படி ஏற்படுகிறது. 4. ஷெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி நிதிபரிவர்த்தனை நடந்தது எப்படி, இதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தால் பல்வேறு உண்மைகள் வெளிப்படும்.

இதனால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதற்காக நீதிமன்ற தீர்ப்பை காட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எனக்கு வரும்போது நான் கும்பகோணத்துக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தேன். எனது 60 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தில் இயற்கையாகவே போராட்ட குணம் கொண்டவன் நான். அதனால் என்னுடன் இருந்த 2 பேருடன் சேர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டேன். கூட்டம் சேர்ந்தால்தான் போராட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News