தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி விமானப்படை விமானத்தை பயன்படுத்தியதில் தேர்தல் விதி மீறல்: கலெக்டரிடம் காங்கிரஸ் புகார்

Published On 2024-03-20 15:12 IST   |   Update On 2024-03-20 15:12:00 IST
  • கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார்.
  • இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

சேலம்:

சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளரான நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் பி.வி. செந்தில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவிக்கு இ-மெயிலில் புகார் அனுப்பி உள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது-

கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975-ல் தேர்தல் பிரசாரத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியபோது தேர்தல் கமிஷனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . அதன்படி எந்தவொரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட, பிரசார நோக்கங்களுக்காக அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அப்படியானால், மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படலாம். இந்திய விமானப்படைக்கும் இதன் மூலம் வாடகை வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News