தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பங்கேற்கும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்

Published On 2023-03-03 12:30 IST   |   Update On 2023-03-03 12:30:00 IST
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.
  • நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் நன்றி கூறுகிறார்.

நாகர்கோவில்:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களும் இதனை கடைபிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். உயர்சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 18 சமுதாயங்களை சேர்ந்த பெண்கள் திறந்த மார்புடன் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. இதற்கு எதிராக 1822-ல் போராட்டம் வெடித்தது. அதனை தொடர்ந்து மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட், ஆங்கிலேய தளபதி கர்னல் நேவால் என்பவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன் பயனாக பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் 1823-ல் வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக அனைத்து சமூகத்தினரும் தோள் சீலை அணிய தொடங்கினர்.

சனாதன சாதி பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட இந்த தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவையொட்டி நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் வருகிற 6-ந்தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கே.டி. உதயம், டாக்டர் பினுலால் சிங், மரியசிசுகுமார், வக்கீல் வெற்றிவேல், செல்லசுவாமி, சுபாஷ் சந்திரபோஸ், மாத்தூர் ஜெயன், திருமாவேந்தன், சுல்பிகர் அலி, ஷாஜஹான், வெற்றிவேந்தன், நாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வரவேற்கிறார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுக உரை வழங்குகிறார். பால பிரஜாபதி அடிகள், விஜய்வசந்த் எம்.பி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பேசுகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News