தமிழ்நாடு செய்திகள்

சென்னிமலை அருகே கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி

Published On 2023-07-30 15:40 IST   |   Update On 2023-07-30 15:40:00 IST
  • மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
  • கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை சரமாரியாக வெட்டி உள்ளார்.

சென்னிமலை:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள புதூர், நஞ்சியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 பெண்கள், அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரியில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.

பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை, நாமக்கல் பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தனர். பாலு, அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் மது போதையில் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்த பாலு மனைவி ஈஸ்வரியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே பாலு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் ஈஸ்வரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.

கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News