தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் மாவட்ட பதிவாளர் அஞ்சனகுமார் வீட்டை படத்தில் காணலாம்.


புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2022-09-30 06:20 GMT   |   Update On 2022-09-30 06:20 GMT
  • மதுரையில் பணியாற்றியபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான பத்திர பதிவுகளை முறைகேடாக செய்துள்ளார்.
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் சிலர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார். இவர் கடந்த பல ஆண்டுகளாக மதுரை மாவட்ட பதிவாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் மதுரையில் பணியாற்றியபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான பத்திர பதிவுகளை முறைகேடாக செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

பின்னர் சில மாதங்கள் தேனிக்கு இடமாறுதலாக அங்கும் பணியாற்றி உள்ளார். அவர் மீதான புகார்களின் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், அஞ்சனகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் தற்போது பணியாற்றி வரும் புதுக்கோட்டைக்கு இன்று அதிகாலை வந்தனர். புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அஞ்சனகுமார் வசித்து வரும் புதுக்கோட்டை நகர் பகுதியான கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனையை தொடங்கினர்.

அதிகாலை 6.30 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அஞ்சனகுமார் எங்கெங்கலெ்லாம் சொத்துக்களை வாங்கியுள்ளார், வங்கி உள்ளிட்டவகையில் அவரது முதலீடு எவ்வளவு, அது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அஞ்சனகுமாரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 இருசக்கர வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அஞ்சனகுமார் வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களின் செல்போன்களையும் பெற்றுக்கொண்டனர். அதேபோல் வெளி நபர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் சிலர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. * * * புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் மாவட்ட பதிவாளர் அஞ்சனகுமார் வீட்டை படத்தில் காணலாம்.

Similar News