பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முறிவுக்கு காரணம் என்ன? - அண்ணாமலை புது விளக்கம்
- வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்.
- பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
சோழிங்கநல்லூர்:
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா கட்சி தேசிய அளவில் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
தென் சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் இன்று சோழிங்கநல்லூரில் நடந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் செய்து இருந்தனர்.
மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
* வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது, மோடி அனைவரையும் வரவேற்பார். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்.
* எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என நாம் ஏன் சொல்ல வேண்டும்?
* வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு அந்த வீட்டில் நாங்கள் இல்லை என கூறுகின்றனர்.
* வீடு நாம் கட்டியுள்ளோம், என்டிஏ கூட்டணி நமது வீடு போன்றது.
* நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேச மாட்டோம்.
* 9 வருடமாக காரத்தை தாங்கியவர்கள் இப்போது வெளியே சென்றுள்ளனர்.
* உணவருந்தியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
* பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
* அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் இருக்கிறது, மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.