தமிழ்நாடு செய்திகள்

புள்ளி விவரங்கள், ஆதாரங்களை கொண்டு மக்களிடம் பேச வேண்டும்- சமூக வலைதள நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை

Published On 2023-06-20 09:22 IST   |   Update On 2023-06-20 09:22:00 IST
  • மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
  • புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும்.

கோவை:

கோவை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா சமூக ஊடக செயல்வீரர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு எப்படி உதவலாம், நாம் செய்யும் உதவி எப்படி அவர்களை சென்றடைகிறது. அதன்பின் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு பல விஷயங்களை படிக்க வேண்டும். பார்க்க வேண்டும், கேட்க வேண்டும். அப்போது தான் நமக்கு தேசிய, மாநில, மாவட்ட, மாநகரம் வரை அனைத்து அரசியலையும் புள்ளி விவரமாக புரிந்து கொள்ள முடியும். அதை மக்களிடம் புட்டு, புட்டு வைக்க முடியும்.

அதற்கு தினமும் நாளிதழ்களை படிப்பதும், டி.வி.யில் செய்தியை கேட்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். மொபைல் போனில் சமூக வலைதளங்களை முழுமையாக பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க.வினர் 50 ஆண்டு காலமாக மக்களிடம் சொல்லி வரும் பொய்கள், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டி அதை அவர்கள் மனதில் இருந்து களைய வேண்டும். அப்பணியை நம் தொண்டர்களும், செயல்வீரர்களும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News