தமிழ்நாடு

முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மரணம்- அன்புமணி ராமதாஸ் இரங்கல்

Published On 2023-01-13 07:00 GMT   |   Update On 2023-01-13 07:00 GMT
  • இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர்.
  • 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர். 1989-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமருக்கு துணை நின்றவர். சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். டெல்லியில் இருக்கும் நாட்களில் என்னை பலமுறை அழைத்து பேசியிருக்கிறார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை நான் பலமுறை சந்தித்து நலம் விசாரித்தேன். கடுமையான உடல்நலக் குறைவிலிருந்து அவர் நலம் பெற்று மீண்ட போது நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்தேன். அவரது திடீர் மறைவை ஏற்றுக்கொள்வதற்கு எனது மனம் மறுக்கிறது.

சரத்யாதவின் மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னடைவு ஆகும். சரத்யாதவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமூகநீதி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News