தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரியில் காலில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலியுடன் சுற்றிய வாலிபர்

Published On 2022-09-07 13:23 IST   |   Update On 2022-09-07 13:23:00 IST
  • பஸ் நிலையத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காலில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலியுடன் பரிதாபத்துக்குரிய நிலையில் சுற்றி வந்தார்.
  • காப்பகத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காலில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலியுடன் பரிதாபத்துக்குரிய நிலையில் சுற்றி வந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவாயல், பெரும்பேடு, ஊத்துக்கோட்டை என ஊர்களின் பெயரை வரிசையாக தெரிவித்துக் கொண்டு இருந்தார். இதனால் அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அறிந்து கொள்ள முடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

மேலும் அவருக்கு வாங்கிக் கொடுத்த உணவையும் சாப்பிடாமல் தூக்கி எரிந்துவிட்டு, சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடினார். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஒரு கடையின் முன்பு அமர வைத்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரவிக்கப்பட்டது. போலீசார் காலில் சங்கிலியுடன் சுற்றிய வாலிபரிடம் விசாரித்து வருகிறார்கள். அவர் மனநல காப்பகத்தில் இருந்து தப்பி வந்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட வரை பராமரிக்க முடியாமல் உறவினர்கள் அழைத்து வந்து இங்கு விட்டு சென்றனரா? என்று விசாரித்து வருகிறார்கள். அவரை காப்பகத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Similar News