தமிழ்நாடு செய்திகள்

குப்பையில் வீசுவதை தடுக்க ரூ.10 டெபாசிட்- வண்டலூர் பூங்காவில் முதல் நாளில் 2,300 பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப கிடைத்தது

Published On 2022-06-08 13:09 IST   |   Update On 2022-06-08 13:11:00 IST
  • முதல் நாளில் 2,300 பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப கிடைத்து இருக்கிறது.
  • பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 டெபாசிட் பெற்ற பிறகு தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கோடை காலத்தையொட்டி வெப்பத்தை தணிக்க ஷவர் குளியல், நீர்ச்சத்து பழங்கள் உள்பட பல்வேறு வசதிகள் விலங்குகள், பறவைகளுக்கு செய்யப்பட்டு உள்ளது.

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்களை பூங்கா வளாகத்தில் வீசி செல்வது நீடித்து வந்தது. இதனால் விலங்குகள், பறவைகள் பாதிக்கும் நிலை இருந்து வந்தது.

இதையடுத்து இதனை தடுக்கும் வகையில் பூங்காவுக்குள் வரும் சுற்றுலா பயணிகள், தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லும்போது திரும்ப பெறும் வகையில் ரூ.10-ஐ டெபாசிட்டாக செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது தண்ணீர் பாட்டிலை கொடுத்து பணத்தை பெறும் புதிய திட்டம் கடந்த 5-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக தண்ணீர் பாட்டிலில் பிரத்யேக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளில் 2,300 பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப கிடைத்து இருக்கிறது. இதனால் விலங்குகள், பறவைகள் அடைக்கப்பட்டு உள்ள இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவது முற்றிலும் குறைந்துள்ளது.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 டெபாசிட் பெற்ற பிறகு தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். வெளியில் செல்லும் போது அந்த பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

முதல் நாளில் 2,300-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இல்லையெனில் பெரும்பாலான விலங்குகளை அச்சுறுத்தவும், அதன் அடைப்புகளில் வீசவும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பார்வையாளர்களாக வரும்போது பழுப்பு நிறத்திலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கேண்டீனில் சிவப்பு நிறத்திலும், டேன் டீ கடையில் ஊதா நிறத்திலும், சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கும் இடத்தில் நீல நிறத்திலும் ஸ்டிக்கர் இருக்கும். இந்த இடங்களில் விற்கப்பட்ட அனைத்து பாட்டில்களும் திரும்ப வந்து விட்டது.

இந்த திட்டம் திடீரென அறிமுகப்படுத்தப்பட வில்லை. ஜூன் 2, 3-ந்தேதி சோதனை முறையில் நடத்தி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நடைமுறை பூங்கா வளாகத்தில் விலங்குகள், பறவைகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் வருகையை குறைக்க உதவும். மேலும் ஸ்டிக்கருடன் பாட்டில்களை திருப்பி தர வேண்டியதன் அவசியத்தை சுற்றுலா பயணிகள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

Tags:    

Similar News