கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
தாம்பரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
- தென்காசியில் உள்ள ஜெயசீலன் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- ஜெயசீலன் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தென்காசிக்கு சென்றார்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெரியார் நகர், 10-வது தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழில் அதிபர். இவர் தாம்பரம் பகுதியில் வருமான வரி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அலுவலகம் நடத்தி வருகிறார்.
தென்காசியில் உள்ள இவரது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயசீலன் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தென்காசிக்கு சென்றார்.
பின்னர் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகையை அள்ளி சென்று உள்ளனர். இது குறித்துதாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.