தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

Published On 2024-02-06 07:00 GMT   |   Update On 2024-02-06 07:10 GMT
  • ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.
  • இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் வின்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர்.

இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


22 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதில் அவர் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டு கூற முடியுமா ? அத்தகைய தியாக வரலாறு இல்லாத பின்னணியில் வந்த பிரதமர் மோடி, இந்தியாவின் விடுதலைக்காகவும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தை சிதைத்து விட்டால் தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.

எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்து செல்கிற பிரதமர் மோடி அவர்களே, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்துங்கள். மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்யாதீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவித்து ஊழலை வளர்க்காதீர்கள், இந்திய பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 பொதுத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News