தமிழ்நாடு செய்திகள்

கைதான மோகனகிருஷ்ணன்

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேற்பார்வையாளர் - விசாரணையில் பரபரப்பு தகவல்

Published On 2022-12-10 13:42 IST   |   Update On 2022-12-10 13:42:00 IST
  • விசாரணையில் மோகன கிருஷ்ணன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
  • கைது செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன்(வயது51).

இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கே.பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் 38 வயது இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் ஒரு புகார் அளித்தார்.

அதில், மோகன கிருஷ்ணன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். நான் எச்சரித்தும், அவா் தொடா்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதற்காக கூடுதல் எஸ்.பி.மோகன் நவாஸ் தலைமையில் நிர்வாக அலுவலர் பத்மா அடங்கிய பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து மேற்பார்வையாளர் மோகனகிருஷ்ணன் மீது ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர் இது போன்று வேறு யாருக்காவது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாகா கமிட்டியினர் விசாரித்தனர்.

அப்போது அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்த மேலும் சில பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, மோகனகிருஷ்ணன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாகவே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். உயர் அலுவலர் என்பதால் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக இருந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் தொந்தரவு செய்வதை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் எஸ்.பி.ஆஷிஷ்ராவத் பாலியல் புகார் உள்பட அனைத்து வகையான புகார்கள் மீதும் எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுத்து வந்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் மோகனகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News