மணிமங்கலம் அருகே மணல் லாரி மோதி விபத்து- 2 கல்லூரி மாணவர்கள் பலி
- பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
- மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவருடன் படித்த ஏராளமான மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
வண்டலூர்:
வாலாஜாபாத்தை சேர்ந்தவர்கள் தசரதன் (வயது20), சந்தோஷ்(20). இருவரும் மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்களில் தசரதன் பி.காமும், சந்தோஷ் பி.ஏ.வும் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் தினந்தோறும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் தசரதனும், சந்தோசும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
மணிமங்கலம் அருகே மண்ணிவாக்கம்-மணிமங்கலம் பிரதான சாலையில் வந்துகொண்டு இருந்தபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் மாணவர்கள் தசரதன், சந்தோஷ் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான மாணவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரையும் கைது செய்தனர்.
மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவருடன் படித்த ஏராளமான மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியான மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இறந்து போன மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
லாரி டிரைவர் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.