தமிழ்நாடு செய்திகள்

கொள்ளை வழக்கில் கைதான 6 பேரை படத்தில் காணலாம்.

பவானியில் கார் டிரைவரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளை- கேரள வாலிபர்கள் 6 பேர் கைது

Published On 2023-01-29 14:35 IST   |   Update On 2023-01-29 14:35:00 IST
  • மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர்.
  • தலைமறைவாக இருக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஈரோடு:

ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவர் கடந்த 21-ந் தேதி காரில் கோவை நோக்கி சென்ற போது, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கி காரை கடத்தி சென்றது.

அடுத்த சில மணி நேரத்தில் சித்தோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீட்கப்பட்டது. காரில் ரூ.2 கோடி பணம் இருந்ததாகவும், மர்ம கும்பல் அதனை கொள்ளையடித்து சென்றதாகவும் விகாஸ் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சித்தோடு போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி., பவானி டி.எஸ்.பி. தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சித்தோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 6 வாலிபர்கள் இருந்தனர்.

காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் சோதனை நடத்தியதில் வீச்சரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன.

மேலும் ரொக்கப்பணம் ரூ.20,000 இருந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல் என்கிற சந்தோஷ், முஜிப் ரஹ்மான், முஜூபூர் ரஹ்மான் ஆகியோர் என்பதும். இவர்கள் கடந்த 21-ந் தேதி பவானி லட்சுமி நகர் அருகே விகாஸ் காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

இதேபோலவே மற்றொரு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு சென்றபோது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வந்த வாகனத்தையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் சோதனையை கண்டதும் இந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த 5 பேர் கும்பலுக்கும் ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தக் கொள்ளை கும்பல் இதே போல் பலரிடம் கைவரிசை காட்டி இருக்ககூடும் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News