சாலை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்.
தொடர் போராட்டம் நடத்திய சாலைபணியாளர்கள் குடும்பத்துடன் கைது- மண்டபத்தில் தங்கவைப்பு
- பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
- 100 பேரை கோபிசெட்டிபாளையம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோபி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோபி கோட்ட பொறியாளரை கண்டித்தும், சாலை பணியாளர்களின் ஒட்டு மொத்த முதுநிலை பட்டியல் வெளியிட்டதில் விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றும் எனவே அந்த பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும், கோபி கோட்டம், நம்பியூர் கோட்டத்தில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படியினை விரைந்து வழங்க வேண்டும்.
கோபி கோட்டத்தில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 20 வருட பணி தொடர்ச்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை எய்தியமைக்குரிய ஆணையும், ஊதிய பலன்களும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கோபி செட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வந்தனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தி சென்றனர்.
சாலை பணியாளர்கள் இன்று காலை 5-வது நாளாக போராட்டம் நடத்த கோபி செட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் திரண்டனர். அப்போது சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 8 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 100 பேரை கோபிசெட்டிபாளையம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.