தமிழ்நாடு

திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் கர்ப்பிணி பலி- உறவினர்கள் மறியல்

Published On 2023-07-11 06:21 GMT   |   Update On 2023-07-11 06:21 GMT
  • ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது.
  • அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 25) தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை நீக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனால் ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செவ்வந்தி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம் ஆனால் அவர்கள் ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். ஆபரேசனுக்கு பிறகும் செவ்வந்தி பலியாகியுள்ளார்.

திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் 3-வதாக கர்ப்பிணி ஒருவர் பலியாகி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News