தமிழ்நாடு

அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2024-03-13 08:28 GMT   |   Update On 2024-03-13 08:28 GMT
  • சென்னையில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2700-க்கும் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன.
  • தமிழ்நாடு முழுவதும் 21,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 18 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிகளில் தொங்கிக்கொண்டு சென்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தையடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில், நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் வேகமாக சென்ற பேருந்து உரசியதில், அதில் படிகளில் தொங்கிச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகரில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்தும் புளிமூட்டைகளைப் போல பயணிகளை அடைத்துச் செல்வதையும், குறைந்தது 20-க்கும் கூடுதலான மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் இயக்கப்படாதது தான்.

சென்னையில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2700-க்கும் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 21,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 18 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News