தமிழ்நாடு செய்திகள்

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.1000 சுரண்டுவது நியாயமா?: ராமதாஸ் கடும் கண்டனம்

Published On 2023-12-03 12:38 IST   |   Update On 2023-12-03 12:38:00 IST
  • பஞ்சாபில் மட்டுமின்றி, அரியானாவில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,860 வழங்கப்படுகிறது.
  • ஒரு டன் கரும்புக்கு ரூ.1000 வீதம் உழவர்களிடம் சுரண்டப்படுவதாக வைத்துக்கொண்டால், ஓராண்டில் ரூ. 2080 கோடி சுரண்டப்படுகிறது.

சென்னை:

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.3910 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் பக்வந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன்மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம் என்ற பெயரை பஞ்சாப் பெற்றுள்ளது. நாட்டில் கரும்புக்கு மிகக் குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப் பெயரை தமிழகம் பெற்றுள்ளது.

பஞ்சாபில் மட்டுமின்றி, அரியானாவில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,860 வழங்கப்படுகிறது. உத்தரபிரதேச அரசு கரும்பு கொள்முதல் விலையை ரூ.3750 ஆக உயர்த்தியுள்ளது. வட மாநிலங்களில் கரும்புக்கு இந்த அளவுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது உழவர்களை சுரண்டும் செயலாகும். தமிழகத்தில் ஆண்டுக்கு 2.08 கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு ரூ.1000 வீதம் உழவர்களிடம் சுரண்டப்படுவதாக வைத்துக்கொண்டால், ஓராண்டில் ரூ. 2080 கோடி சுரண்டப்படுகிறது.

தமிழ்நாட்டு உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால், 2016-17-ம் ஆண்டுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த, கரும்புக்கு மாநில அரசே பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த விலையுடன் ரூ.1081 கூடுதல் விலையாக சேர்த்து, டன்னுக்கு 4000 ரூபாயை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவிக்க வேண்டும். அந்த விலையை அனைத்து சர்க்கரை ஆலைகளும் வழங்குவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News