தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரியில் சூறாவளி காற்றுடன் கனமழை- அரூரில் ஆலங்கட்டி மழை பெய்தது

Published On 2022-06-06 10:22 IST   |   Update On 2022-06-06 10:22:00 IST
  • சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.
  • அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் வேப்பனஹள்ளி வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து மூன்று மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கிருந்த மின்கம்பங்கள் அறுந்து சாலையில் விழுந்தது.

இதனால் சிகரமா கனப்பள்ளி, உண்டி கைநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் தருமபுரி மாவட்டம், பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், ஏரியூர், பாலக்கோடு, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதனால் பென்னாகரம் காவல் நிலையம், சந்தை தோப்பு இந்தியன் வங்கி, பென்னாகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்து விழுந்தது.

குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையம் முன்புறம் உள்ள புளியமரம் வேருடன் காவல் நிலையத்தின் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.

அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, எல்லபுடையாம்பட்டி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அத்துடன் பலத்த காற்று வீசியதால் அரூர் தீர்த்தமலை சாலையில் கீழானூரில் மரம் முறிந்து விழுந்தது. மழையால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News