தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது - தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு

Published On 2024-04-09 18:47 IST   |   Update On 2024-04-09 18:47:00 IST
  • பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார்
  • இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார்

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார். தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.

பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளார். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால்.கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் 144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.

Tags:    

Similar News