பிரதமர் மோடி 5 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரம்
- மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது.
- தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை வாயிலாக தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசை விமர்சித்தும் பிரசாரம் செய்தார்.
இந்த சூழலில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். நெல்லையில் பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில், பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக சாடினார். அதன்பிறகு, சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது. இதே உற்சாகத்துடன் பிரதமர் மோடி மீண்டும் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 15-ந்தேதியும், கோவைக்கு 18-ந்தேதியும், சேலத்துக்கு 19-ந்தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா தொண்டர்களை சந்தித்தார். பிரதமரின் தொடர் வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக, மீண்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய 4 இடங்கள் அல்லது கூடுதலாக ஒரு இடம் என 5 இடங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்ய இருப்பது உற்சாகத்தை அளிப்பதாக, பா.ஜனதா தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.