தமிழ்நாடு

புழலில் பரிதாபம்: மழைக்கு வீடு இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2023-11-03 07:11 GMT   |   Update On 2023-11-03 07:11 GMT
  • இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்குன்றம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பின்னர் நேற்று இரவு தொடங்கிய பலத்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் புழலில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புழல் அடுத்த லட்சமிபுரம், சப்தகிரி நகரை சேர்ந்தவர் முருகன். இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது47). நேற்று காலை வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு புழல் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் சேதம் அடைந்து இருந்த லட்சுமி வசித்த வீட்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

தனி வீடு என்பதால் லட்சுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தது பக்கத்துவீட்டில் வசிப்பவர்களுக் கு தெரியவில்லை.

இதற்கிடையே இரவு 8.30 மணியளவில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் மனைவி லட்சுமி சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News