தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாள் சூறாவளி பிரசாரம்

Published On 2024-03-11 13:59 IST   |   Update On 2024-03-11 13:59:00 IST
  • கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
  • பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சேலம்:

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாராளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார்.

இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கடந்த மாதம் 27-ந் தேதி கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரவில் மதுரையில் தங்கிய அவர் மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விழாவில் குலசேகர பட்டணம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் கடந்த 4-ந் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தொண்டர்கள் அமருவதற்கான இடமும், வாகனம் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேலம் கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி பேச உள்ள மேடை அமையும் இடத்தில் நேற்று பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே நேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணை செயலாளருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்முருகன், சேலம் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் சேலத்திற்கு வருகை தரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது குறித்தும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

சேலம் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி 16-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அவர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அவர் அந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி பேசுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.

இந்த முறை பாராளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து களம் இறங்கியது. தற்போது இந்த கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன.

இந்த தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளரையும் 16-ந்தேதி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்து ஆதரவு திரட்ட உள்ளார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவையில் ஏற்கனவே கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அங்கு ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவியும் வகையில் இட வசதி உள்ளன. இதனால் அந்த இடத்திலேயே இந்த முறையும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கோவை பாராளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது பிரதமர் வருகை தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்குவோம். பிரதமர் கேரளாவில் இருந்து கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News