தமிழ்நாடு செய்திகள்

கே.எஸ்.அழகிரிக்கு எதிர்ப்பு எதிரொலி- ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்ட கார்கே

Published On 2022-12-06 14:52 IST   |   Update On 2022-12-06 15:21:00 IST
  • கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
  • தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

சென்னை:

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கடந்த வாரம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து புகார் செய்தனர்.

மாநில தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதற்கிடையில் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அதே நேரம் 3 ஆண்டு செயல்பாடுகள், தற்போது மாநிலம் முழுவதும் 23,400 கொடியேற்றும் திட்டம் ஆகியவற்றையும் டெல்லி மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அழைத்து கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார். அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டுள்ளார்.

அப்போது 'துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களை பார்த்து நியமியுங்கள்' என்று சிதம்பரம் கூறியதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

என்னதான் நெருக்கடி இருந்தாலும் ராகுல் நடைபயணம் நடந்து வருவதால் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது.

ஆனால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநில உட்கட்சி பிரச்சினைகளில் அந்த மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளார்.

எனவே தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். மேலிடத்தின் முடிவுக்காக தொண்டர்கள் காத்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News