பணியின்போது கொரோனாவில் இறந்த மருத்துவ பணியாளர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.
- கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கோரியவர் மு.க. ஸ்டாலின்.
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது.
அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாகும்.
உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்குவது குறித்து நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.