தமிழ்நாடு செய்திகள்

"நீங்கள் நலமா?" புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-06 12:30 IST   |   Update On 2024-03-06 12:30:00 IST
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பயன் பெறுகிறார்கள்.
  • நீங்கள் நலமா திட்டத்தை முதலமைச்சர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பயன் பெறுகிறார்கள்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 1 கோடி பேர் பயன் அடைகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் அடைவது போன்று பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஒதுக்குவது போன்று மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்பட புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வரும் நிதியாண்டில் செயல்படுத்த உள்ளார்.

அரசு திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் நலமா? என்கிற புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கலெக்டர்கள் ஆகியோர் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் கருத்தை அறிய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நீங்கள் நலமா திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா? அதில் ஏதும் சிரமம் உள்ளதா? என்பதை கேட்டறிந்தார்.

இதேபோல் அமைச்சர்களும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தனர்.

Tags:    

Similar News