தமிழ்நாடு

மசினகுடி தரைபாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.

கூடலூர்-மசினகுடி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

Update: 2022-08-10 08:25 GMT
  • மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூடலூர்-மசினகுடி இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
  • எடக்காடுஹட்டி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், பந்தலூா், கூடலூா், ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

கூடலூர் பகுதிகளில் பெய்த மழையால் குனில், இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாண்டியாறு, புன்னம்புழா, மாயாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூடலூர்-மசினகுடி இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இன்றும் மாயாற்றில் அதிகளவில் வெள்ளம் செல்வதால் கூடலூர்-மசினகுடி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட நகர பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊட்டி-அவலாஞ்சி சாலையில் எமரால்டு பகுதியிலுள்ள காந்திகண்டி என்ற இடத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டங்கள், கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அடித்து செல்லப்பட்டது.

அதேபோல, எடக்காடுஹட்டி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஊட்டி, வண்டிசோலை பகுதியில் ராட்சத மரம் சாலை மற்றும் மின்கம்பம் மீது விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன், தேசிய பேரிடா் மீட்பு படை அதிகாரி சந்தோஷ்குமாா் தலைமையிலான 2 குழுக்களுடன் மின் வாரிய ஊழியா்களும் இணைந்து மரத்தை அகற்றினா்.

ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுமந்து சாலை, மான் பூங்கா ஆகிய பகுதிகளில் விழுந்த மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. பாா்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் பகுதியில் மின் கம்பங்கள் மீது அவ்வப்போது மரங்கள் விழுவதால் அங்கிருந்து குடிநீா் விநியோகம் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News