மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 606 கன அடியாக குறைந்தது
- பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக இருந்தது.
இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு பெயரளவிலேயே அம்மாநில அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 9,345 கன அடியாக அதிகரித்தது.
மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மாலை முதல் 18,978 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.
இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து அணைக்கு 15,606 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 10.11 டி.எம்.சி. ஆக உள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 35.98 அடியாக உயர்ந்தது. 4 நாட்களில் 4.99 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.