தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்

Published On 2023-08-02 09:11 IST   |   Update On 2023-08-02 09:11:00 IST
  • மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
  • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 62.490 அடியாக இருந்தது.

மேட்டூர்:

மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பொழிந்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அதிகபட்சமாக தமிழகத்திற்கு 23ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே மழை நின்றதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 62.490 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 305 கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 26.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். தற்போது அணையில் இருந்து தினமும் 1 டி.எம்.சி.வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்டா விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags:    

Similar News