மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக 103.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மளமளவென சரிந்தது.
இதனால் 3 லட்சம் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
இதன் காரணமாக தமிழகத்துக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி வீதம் முதலில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் தண்ணீர் திறப்பு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரத்தொடங்கியது. பின்னர் அங்கிருந்து புதன்கிழமை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 அடியாக இருந்தது. அது இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 18 ஆயிரத்து 58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.53 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 9 ஆயிரத்து 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.