தமிழ்நாடு செய்திகள்

சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை... மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Published On 2022-12-21 22:06 IST   |   Update On 2022-12-21 22:06:00 IST
  • புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
  • தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை:

சீனா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் வைரசை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

இதற்கிடையே பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது, தொற்று எண்ணிக்கை 49 என்ற நிலையிலும் உயிரிழப்பு இல்லாத நிலை உள்ளது என கூறி உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சீனா, ஹாங்காங்  ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News