தமிழ்நாடு

ரேஷன் கார்டுடன் சொத்துவரி எண் இணைத்துவிட்டால் ஏழையா? வசதி படைத்தவரா? என்பது தெரிந்துவிடும்- உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை

Published On 2022-12-25 10:08 GMT   |   Update On 2022-12-25 10:08 GMT
  • ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
  • 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

சென்னை:

இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.

கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.

ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.

இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.

Tags:    

Similar News