தமிழ்நாடு

இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் திரும்பி பார்க்கிறது- மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு

Published On 2023-01-21 08:19 GMT   |   Update On 2023-01-21 08:19 GMT
  • பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று உலக தலைவர்கள் உற்று நோக்குகின்றனர்.
  • மேக்கிங் இந்தியா திட்டத்தின்கீழ் பாதுகாப்பு துறை தேவையான தளவாடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை:

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) 3 நாள் மாநில மாநாடு நெல்லை சங்கீதசபாவில் நேற்று தொடங்கியது.

மாநாட்டின் 2-ம் நாளான இன்று வையத் தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம், திராவிடத்தால் நாம் இழந்தது என்ன என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

25 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாணவராக கலந்து கொண்டேன். இப்போது மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

1998-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இதுபோன்ற மாநாட்டில் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உயர்பதவிகளில் இருந்தவர்கள் பாகுபாடின்றி கலந்து கொண்டார்கள்.

இந்தியா, சுயசார்பு பாரதத்தின் கீழ் இயங்கி கொண்டு இருக்கிறது. ஏ.பி.வி.பி. அமைப்பில் இருந்து வந்தவர்கள் தான் இன்று இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

8 ஆண்டுகள் இந்தியா எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை சொல்ல 8 ஆண்டுகள் தேவைப்படும். உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து, உலக நாடுகள் நம்மை திரும்பி பார்க்கிறது.

பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று உலக தலைவர்கள் உற்று நோக்குகின்றனர். ரஷ்யா, உக்ரைன் போரின்போது உலகத்தில் எந்த நாடுகளும் செய்யாத ஒன்றை இந்தியா செய்தது.

அப்போது உக்ரைனில் மருத்துவம் படித்த 20 ஆயிரம் மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி உலக தலைவர்களுடன் இணக்கமாக இருந்ததினால் தான்.

மேக்கிங் இந்தியா திட்டத்தின்கீழ் பாதுகாப்பு துறை தேவையான தளவாடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் 2-வது இடத்தில் உள்ளோம்.

கொரோனா காலகட்டத்தில் 200 கோடி தடுப்பூசிகள் தயாரித்து இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்திற்கும் வினியோகித்தோம்.

ஹாலிவுட் படங்கள் வெளிநாட்டில் தான் எடுக்கப்படும் என்ற நிலையை மாற்றி சென்னை, பெங்களூரு போன்ற இடங்களிலும் அதற்கான தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்மொழியை ஊக்குவிக்கதான் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் போட்டியிடவே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இணைந்து அனைவருக்கமான வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News