தமிழ்நாடு செய்திகள்

அரசியல் கடந்து எங்களை இணைத்தது இதுதான்.... தி.மு.க. கூட்டணி பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

Published On 2023-11-07 13:27 IST   |   Update On 2023-11-07 13:27:00 IST
  • காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் எந்திரத்தை 'கமல் பண்பாட்டு' மையத்தின் சார்பில் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது :-

இன்று முக்கியமான ஒரு நல்ல நாள்; நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா; நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

ராஜ்கமல் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக இந்த எந்திரத்தை வைத்து ஆரோக்கியமாக குடிநீர் அருந்தி வருகிறேன். அதேபோன்ற ஒரு எந்திரத்தை இந்த மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறோம்.

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். மாசு இல்லாத ஒரு குடிநீரை இந்த எந்திரம் மூலம் மக்கள் பெற முடியும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பின்னர் கமல்ஹாசனிடம் தி.மு.க. கூட்டணிக்கான அடித்தளம் போல இந்த நிகழ்ச்சி காணப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "அரசியல் கடந்து மனித நேயம் எங்களை இணைத்துள்ளது. எல்லோருக்கும் தனிகட்சி உள்ளது. அவர்களுக்கென விசுவாசம் உள்ளது. ஆனால் மனிதநேயம் முக்கியம் அதுதான் இணைத்துள்ளது. இந்த மனிதநேயத்துடன் இது தொடரும். இங்கு அனைவரும் அரசியல் கடந்து மனிதம் சார்ந்து வந்துள்ளோம்" என்றார்.

Tags:    

Similar News